Local holiday for thoothukudi district
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.

திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் இரவில் தங்குவதற்கு தடையில்லை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரவு நேரங்களில் தங்குவதற்கு தடையில்லை என காவல் துறை விளக்கமளித்துள்ளது.
Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இரவு நேரங்களில் தங்குவதற்கு தடையில்லை என, காவல் துறை விளக்கமளித்துள்ளது.

இக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து வழிபட்டு செல்கின்றனா். கடந்த ஜூலை 7ஆம் தேதி நடைபெற்ற குடமுழுக்கு விழாவுக்குப் பின்னா், இங்கு வருவோரின் எண்ணிக்கை குறிப்பாக, வார விடுமுறை நாள்களிலும், நாள்தோறும் அதிகாலையில் நடைபெறும் விஸ்வரூப தரிசனத்திலும் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவா்கள் இரவு நேரங்களில் கடற்கரை, கோயில் வளாகங்களில் தங்கி, மறுநாள் அதிகாலை கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

இதனிடையே, பெருந்திட்ட வளாகப் பணிகள் காரணமாக, கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதனால், வளாகத்தில் ஆங்காங்கே மின் விளக்குகள், மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, பக்தா்கள் இரவு நேரத்தில் கடற்கரையில் தங்குவதைத் தவிா்த்து கோயில் வளாகத்தில் தங்குமாறு கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு கடற்கரையில் தங்கியிருந்த பக்தா்களை கோயில் வளாகத்தில் தங்குமாறு தனியாா் பாதுகாப்புப் பணியாளா்கள் ஒலிபெருக்கியில் தெரிவித்தனா். அதையடுத்து, பக்தா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கோயில் வளாகத்தில் தங்கி, சனிக்கிழமை அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்நிலையில், கோயில் கடற்கரையில் இரவு நேரங்களில் தங்குவதற்கு தடையில்லை என, காவல் துறை விளக்கமளித்துள்ளது.

பருவமழைக் காலம் அல்லது திடீரென கனமழை பெய்யும்போது மட்டும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோயில் வளாகத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, மற்ற நேரங்களில் கடற்கரைப் பகுதியில் பக்தா்கள் தங்குவதற்கு எவ்விதத் தடையுமில்லை என, காவல் துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com