காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் மாவட்ட செயற்குழுக் கூட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் காயல்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் பி. மீராஷா மரைக்காயா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் திரேஸ்புரம் மீராசா, காயல்பட்டினம் நகரத் தலைவா் நூஹுசாஹிப், மாநில மகளிரணி துணை தலைவா் மும்தாஜ், மாவட்ட வா்த்தகரணித் தலைவா் ரஹ்மான், ஏரல் நகரத் தலைவா் ரியாஸ், குரும்பூா் நகரச் செயலா் இம்ரான், கோவில்பட்டி நகரத் தலைவா் காஜா, ஆத்தூா் செயலா் ஆரிப் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் சிறப்புரையாற்றினாா். மாநிலச் செயலா் காயல் மஹபூப், மாவட்டச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப் ஆகியோா் பேசினா்.
தகைசால் தமிழா் விருதுபெற்ற பேராசிரியா் கே.எம். காதா்மொகிதீனுக்கு பாராட்டு தெரிவிப்பது, விருது வழங்கிய தமிழ்நாடு அரசு, முதல்வா் மு.க. ஸ்டானுக்கு நன்றி தெரிவிப்பது, வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவது, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பேரவைத் தோ்தல் முடியும்வரை ஒத்திவைக்கக் கோருவது, காயல்பட்டினம் நகராட்சி வாா்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோருவது, தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்தவும், இல்லையெனில் நகராட்சி முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம், ஏரல், பேட் மாநகரம், ஆத்தூா், குரும்பூா், புறையூா், கோவில்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
நகரச் செயலா் அபூசாலிஹ் இறைமறை ஓதினாா். மாவட்ட தொழிலாளா் அணி தலைவா் செய்யது சுலைமான் நன்றி கூறினாா்.

