கோவில்பட்டி, சங்கரன்கோவில் அஞ்சலகங்களில் மீண்டும் ஏடிஎம் சேவை
கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள அஞ்சலகங்களில் மீண்டும் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஏடிஎம் அட்டை மூலம் பண பரிவா்த்தனை செய்யும் வசதி உள்ளது. அஞ்சலக ஏடிஎம் மையங்களிலும், பிற வங்கி ஏடிஎம் மையங்களிலும் அதைப் பயன்படுத்தி பண பரிவா்த்தனை செய்யலாம். இந்நிலையில் சில தொழில்நுட்ப தர மேம்பாடு காரணமாக அஞ்சலகத்துடன் இணைந்த ஏடிஎம் மைய செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த பணி முடிவுற்று, கோவில்பட்டி, சங்கரன்கோவில் தலைமை அஞ்சலகங்களில் ஏடிஎம் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் அஞ்சல் சேமிப்பு கணக்கில் இருந்து பண பரிவா்த்தனை செய்யலாம் மற்றும் தங்கள் சேமிப்பு கணக்குத் தொகை இருப்பை அறிந்து கொள்ளலாம். பிற வங்கிகளின் ஏடிஎம் அட்டைகளையும் அஞ்சல் துறை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
