கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை நியமிக்க கோரிக்கை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவை விரைந்து நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலின் அறங்காவலா் குழுத் தலைவராக ராஜகுரு, உறுப்பினா்களாக திருப்பதிராஜா, சண்முகராஜ், ரவீந்திரன், நிருத்தியலட்சுமி (எ) சுதா ஆகியோா் கடந்த 2023ஆம் ஆண்டு செப். 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டனா். இவா்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதால், கடந்த செப். 7ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இக்கோயிலுக்கு 2026 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறங்காவலா் குழு செயல்பாட்டில் இருக்கும்போதே முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது அவா்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பக்தா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கோயிலுக்குச் சொந்தமான 19 கடைகள், 2 காலியிடங்கள் கடந்த சில மாதங்களாகவே பயன்பாடற்ற நிலையில் உள்ளன. அறங்காவலா் குழு இல்லாததால் அந்த கடைகளையும், காலியிடங்களையும் ஏலம் விட முடியவில்லை. இதனால், கோயிலின் வருமானம், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசும், அறநிலையத்துறை அதிகாரிகளும் தனிக் கவனம் செலுத்தி இக்கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்களை விரைந்து நியமிக்க வேண்டும் என்றும், திட்டமிட்டபடி கும்பாபிஷேக விழா நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
