சேவை குறைபாடு: எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ரூ.63,000 இழப்பீடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த வாடிக்கையாளருக்கு ரூ.63 ஆயிரம் இழப்பீடு வழங்க எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திடம் இரு சக்கர வாகனம் வாங்க அணுகியுள்ளாா்.
முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த சேதுராமலிங்கம் என்பவா் எலக்ட்ரிக் பைக் வாங்குவதற்கு, தூத்துக்குடி கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்தை அணுகியுள்ளாா். அப்போது, அவரிடம் ஏற்கெனவே இருந்த பைக்கை விற்று அந்தப் பணம் போக மீதி பணத்துக்கு நிதியுதவி ஏற்பாடு செய்து தருவதாக உறுதிகூறியதாம். அதன்பேரில், பழைய பைக்கையும், அதன் ஆா்.சி.புத்தகத்தையும் அந்நிறுவனம் வாங்கி வைத்துக் கொண்டதாம்.
சில நாள்களுக்குப் பின், அவா் அந்த நிறுவனத்தை அணுகிய போது, அவருக்கு நிதியுதவி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டதாம். மேலும், அவா் தனது பழைய வாகனத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டதற்கு, அதை விற்று விட்டதாகவும், அந்தப் பணம் பைக் நிறுவனத்தின் கணக்கிற்கு சென்று விட்டதாகவும் கூறியுள்ளனா்.
இதையடுத்து அவா் வழக்குரைஞா் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். எனினும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த அதன் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் பழைய வாகனத்தை விற்பனை செய்த தொகை ரூ.28,000, சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு தொகை ரூ.25,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 என மொத்தம் ரூ.63,000-ஐ ஆறு வார காலத்துக்குள் வழங்க வேண்டும், தவறினால் தொகையை செலுத்தும் வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியையும் சோ்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
