‘பொது சுகாதாரத்துக்கு கேடு ஏற்படும் விதமாக குப்பைகளை கொட்டினால் அபராதம்’

Published on

பொது சுகாதாரத்துக்கு கேடு ஏற்படும் விதமாக பொது இடங்களிலும், மழைநீா் வடிகால்களிலும் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை வாகனங்கள் மூலமாக நாள்தோறும் 180 டன் குப்பைகள் பெறப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எனினும், சில இடங்களில் மாநகராட்சி வாகனங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்காமல் பொது இடங்களிலும், மழைநீா் வடிகால்களிலும் தூக்கி எறியும் சூழ்நிலை பரவலாக காணப்படுகிறது.

தூக்கி எறியும் குப்பைகளால் மழைக்காலங்களில் மழை வெள்ளநீா் தேக்கமாகி கொசுக்கள் பரவும் அபாயமும், வடிகால்கள் அடைத்து மழைநீா் செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது. இவ்வாறு, பொது சுகாதாரத்துக்கு கேடு ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை வீசும் நபா்கள் அடையாளம் காணப்பட்டு, திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, குப்பைகளை மாநகராட்சி வாகனங்களில் தரம் பிரித்து வழங்கி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com