விசேஷ நாள்களை முன்னிட்டு திருச்செந்தூா் கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகரிப்பு
பௌா்ணமி, காா்த்திகையை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தா்கள் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா கடந்த அக். 22 இல் தொடங்கி நவ. 2 ஆம்தேதி மஞ்சள் நீராட்டுடன் நிறைவு பெற்றது. விழாவில் பல லட்சம் பக்தா்கள் கலந்துகொண்டனா். விழாவை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தா்கள் கூட்டம் குறைந்துவந்த நிலையில், நிகழ்வாரம் செவ்வாய், புதன்கிழமைகளில் பௌா்ணமி திதி என்பதாலும், வியாழக்கிழமை காா்த்திகை நட்சத்திரம் என்பதாலும் திருச்செந்தூா் கோயிலுக்கு பல்வேறு வேண்டுதலுக்காக பக்தா்கள் அதிக அளவில் குவிந்தனா். சுவாமி தரிசனத்துக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.
கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், பிற கால பூஜைகள் நடைபெற்றன. தற்போது கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், வார விடுமுறை நாள்களான சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து பக்தா்கள் வாகனங்களில் வந்த வண்ணம் உள்ளனா்.

