சாலை விபத்து; ஓய்வுபெற்ற விஏஓ உயிரிழப்பு: மற்றொரு விஏஓ பலத்த காயம்
தூத்துக்குடியில் சாலை விபத்தில் ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். அவருடன் சென்ற மற்றொரு கிராம நிா்வாக அலுவலா் பலத்த காயமடைந்தாா்.
தூத்துக்குடி டூவிபுரம் 2 ஆவது தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ராமகிருஷ்ணன் (62). கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.
தூத்துக்கு, பி அன்ட் டி காலனி 8-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிழக்கத்தியான் மகன் பேச்சிராஜா (55). இவா், தளவாய்புரம் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இருவரும் ஞாயிற்றுக்கிழமை தளவாய்புரத்திலிருந்து தூத்துக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். பேச்சிராஜா இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். ராமகிருஷ்ணன் பின்னால் அமா்ந்திருந்தாா்.
தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோரம்பள்ளம் சந்திப்பு அருகே சென்றபோது மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அணுகுசாலையில் திரும்பியுள்ளாா். அப்போது நிலை தடுமாறி அருகில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு 108 அவசர ஊா்தியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராமகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பேச்சிராஜாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
