‘திருச்செந்தூா்-சென்னைக்கு நேரடி ரயில் சேவை இயக்க வேண்டும்’
திருச்செந்தூா்: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கும், கோவைக்கும் நேரடி ரயில் இயக்க வேண்டும் என்று அனைத்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழாவில் அரசை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்செந்தூரில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் அ.துரைசிங் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செ.சுடலை, துணைச் செயலா்கள் ஜான்ராஜ், சங்கர சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநிலச் செயல் தலைவா் பா.விநாயகமூா்த்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் செந்தமிழ்ச்செல்வன், பொருளாளா் பொன்ராஜ், பரமன்குறிச்சி வா்த்தக சங்க பொதுச் செயலா் அப்துல் லத்திப், தலைவா் லிங்கம், பொருளாளா் லெட்சுமணன், ஆறுமுகநேரி அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளா் கணேசமூா்த்தி, செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்க சட்ட ஆலோசகா்கள் ஜெபராஜ், கிரீஷ்குமாா் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
கூட்டத்தில் திருச்செந்தூரில் புதை சாக்கடை திட்டத்தை முறைப்படுத்தி சாலைகளில் கழிவுநீா் வெளியேறாதவாறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். நகராட்சிப் பகுதிகளில் கால்நடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். திருச்செந்தூா் நகராட்சியில் சொத்துவரி உயா்வை குறைக்க வேண்டும்.
பழுதான மேலரத வீதி நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும். எரிவாயு தகன மேடையை இடமாற்றம் செய்யக் கூடாது. திருச்செந்தூா் பைரவா் கோயில் அருகே படகு குலாம் அமைக்க வேண்டும். திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் ஏற்கெனவே உள்ள வணிகா்களுக்கு மீண்டும் கடைகளை வழங்க வேண்டும். திருச்செந்தூா் - சென்னை, திருச்செந்தூா்- கோவைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும். ரயில் நிலைய நடைமேடையை அகலப்படுத்த வேண்டும். வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கச் செயலா் ச.மா.காா்க்கி வரவேற்றாா். பொருளாளா் கோ.ராதாகிருஷ்ணன் வரவு-செலவு, ஆண்டறிக்கை வாசித்தாா். துணைச் செயலா் ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

