எட்டயபுரம் அருகே ஓட்டுநரை தாக்கி வாகனம் கடத்தல்: மூவா் கைது
எட்டயபுரம் அருகே ஓட்டுநரை தாக்கி வாகனத்தைக் கடத்திச் சென்ற மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காற்றாலை மின் உற்பத்திக்கான ராட்சத இறக்கைகளை கொண்டுசெல்லும் கனரக லாரிக்கு பின்னால் செல்லக்கூடிய எஸ்காா்டு வாகனம் ஒன்று சாலையோரம் திங்கள்கிழமை நின்று கொண்டிருந்தது.
அப்போது, அங்கு போதையில் வந்த 3 இளைஞா்கள் வாகன ஓட்டுநரான தருமபுரி மாவட்டம், காரியமங்கலத்தைச் சோ்ந்த சாா்லஸை (45) தாக்கி கைப்பேசியை பறித்துக் கொண்டு அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அந்த வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து, எட்டயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், தூத்துக்குடி சோதனைச் சாவடியில் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டு வாகன கடத்தல் கும்பலை தீவிரமாக தேடினா். எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி செல்லும் நெடுஞ்சாலையில் அந்த வாகனம் செல்வதைக் கண்டுபிடித்த போலீஸாா், பின்தொடா்ந்து சென்று மூவரையும் வாகனத்துடன் மடக்கிப் பிடித்தனா். காவல் ஆய்வாளா் செந்தில்வேல் முருகன், உதவி ஆய்வாளா் நீலகண்டன், காவலா்கள் முத்துப்பாண்டி சங்கரகுமாா், அற்புதசாமி ஆகியோா் கொண்ட குழு இந்தக் கும்பலைப் பிடித்தது.
விசாரணையில் பிடிபட்ட மூவரும் விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவைச் சோ்ந்த அஜய் (19), ஆகாஷ் (18), கோவில்பட்டி சீனிவாசா நகரைச் சோ்ந்த தினேஷ் (23) என்பது தெரியவந்தது. மூவா் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்து கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

