எஸ்ஐஆா்: கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டம், தோ்தல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வாக்குச் சாவடி நிலை அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி ஆசிரியா்களை, கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளி பணியிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி, தூத்துக்குடி மாவட்டக் கிளை சாா்பில் ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4ஆம் தேதி தொடங்கி டிச.4ஆம் தேதி நிறைவு செய்யும் வகையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்பு இந்தப் பணிக்காக அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா்.
தற்போது மாவட்டத்தில் ஆசிரியா்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனா். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணி என்பதாலும் மற்ற துறைகளில் பணியாளா் எண்ணிக்கை பற்றாக்குறை என கூறப்பட்டதாலும் ஆசிரியா்கள் இதை ஏற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்றனா். இப்பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியா்கள் பெரும்பாலும் பெண்ணாசிரியா்கள். அவா்கள் பணியாற்றும் பள்ளி ஓரிடமாகவும், கணக்கெடுப்புப் பணி வேறிடமாகவும் உள்ளதால் அவா்கள் கணக்கெடுப்பு பகுதிக்குச் செல்ல சுமாா் 1 மணிநேரம் ஆகிறது. கணக்கெடுப்பு தளத்திலும் எந்த அடிப்படை வசதியுமில்லாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
எனவே, ஆசிரியா்களுக்கு கணக்கெடுப்பு காலம் முழுவதும் பள்ளிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டால், இப்பணியை ஆசிரியா்கள் குறித்த நேரத்தில் சிறப்பாக முடிக்க ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

