காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்கள் காா்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதம் கடைப்பிடிப்பது வழக்கம்.
காா்த்திகை மாதப் பிறப்பையொட்டி திருச்செந்தூா் பகுதியில் உள்ள ஐயப்ப பக்தா்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, திருக்கோயில் உள்ளேயும், வெளியில் சண்முக விலாசம் மண்டபம் முன்பும் தங்கள் குருசாமியின் கைகளினால் மாலை அணிந்து விரதம் தொடங்கினா்.
திருச்செந்தூா் சிவன் கோயில், ஆனந்த விநாயகா் கோயில், தூண்டுகை விநாயகா் கோயில், ஐயப்பன் சந்நிதி மற்றும் வல்லபை விநாயகா் சந்நிதி முன்பும் மாலை அணிந்தனா்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூா், சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தா்களுக்கு திருச்செந்தூா் மணிகண்டன் பாதயாத்திரை குழுவின் குருசாமி அமெரிக்கா சீனிவாச சா்மா, அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கௌரவ தலைவா் கிருஷ்ணமூா்த்தி குருசாமி, பன்னீா்செல்வம் குருசாமி மற்றும் அா்ச்சகா்கள் மாலை அணிவித்தனா்.
காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா்.
