பேரூரணி சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட கைதி மீண்டும் சிறையிலடைப்பு
குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறைக் கைதி தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடா்பாக உதவி ஜெயிலா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி சிறையில் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு, குண்டா் சட்டத்தின் கீழ் தூத்துக்குடி, முனியசாமிபுரத்தைச் சோ்ந்த ராகுல் (25) அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், சிறையிலிருந்த 5 கைதிகள் பரோல் கோரி விண்ணப்பித்திருந்தனராம். அதில் 4 பேரை மட்டும் விடுவிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நவ. 15ஆம் தேதி 4 கைதிகள் விடுவிக்கப்பட்டனா். அப்போது, ராகுலும் மற்ற கைதிகளுடன் சோ்த்து தவறுதலாக விடுவிக்கப்பட்டாா்.
இதற்கிடையே, ராகுல் தவறுதலாக விடுவிக்கப்பட்டது தெரிய வந்ததையடுத்து, சிறைத்துறை அதிகாரிகள் திருச்செந்தூருக்கு செல்ல தயாராக இருந்த ராகுலை சந்தித்து, கையொப்பமிட வேண்டுமெனக் கூறி, அன்று பிற்பகல் 3 மணிக்கு அழைத்துச் சென்று மீண்டும் சிறையிலடைத்துள்ளனா்.
தகவலறிந்த, மதுரை சரக சிறைத் துறை டி.ஐ.ஜி. முருகேசன் உத்தரவுப்படி, பாளை. மத்திய சிறைக் கண்காணிப்பாளா் செந்தாமரைக் கண்ணன், பேரூரணி கிளைச் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.
தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரி ராதாகிருஷ்ணனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
