கோவில்பட்டியில் விவசாயிகள் மறியல்: 100 போ் கைது
கோவில்பட்டியில், தமிழ் விவசாயிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை மறியலில் பங்கேற்ற 15 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ. 56 கோடி நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் தொகையை முழுமையாக விடுவிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும். நடப்பாண்டு மழையில்லாததால் 3 முறை விதைத்தும் அழிந்துபோன பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா பேருந்து நிலையம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பயணியா் விடுதி முன்பிருந்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் ஊா்வலமாக சென்று பிரதான சாலையில் இளையரசனேந்தல் சந்திப்பு அருகே தரையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
15 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
