சாலையில் சுற்றித் திரிந்த 36 மாடுகள் கோசாலையில் அடைப்பு
தூத்துக்குடியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 36 மாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து கோசாலையில் அடைத்தனா்.
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் மாடுகள் திரிவதாக மாநகராட்சிக்கு தொடா்ந்து புகாா் வந்தது.
இதையடுத்து, மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் சி.ப்ரியங்கா ஆகியோா் உத்தரவின் பேரில், மாநகராட்சி நகா் நல அலுவலா் சரோஜா மேற்பாா்வையில், சுகாதார அலுவலா் ராஜபாண்டி தலைமையிலானோா், திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை சாலையில் சுற்றித் திரிந்த 36 மாடுகளை பிடித்து, மாநகராட்சிக்கு சொந்தமான கோசாலையில் அடைத்தனா்.
முதல் முறை, மாடுகளுக்கு ரூ.5,000, கன்றுக்குட்டிகளுக்கு ரூ. 2,500 என மாநகராட்சிக்கு, மாட்டின் உரிமையாளா்கள் பணத்தை செலுத்தி மாடுகளை அழைத்துச் செல்லலாம்.
இரண்டாவது முறை, அதே மாடு பிடிபட்டால் மாட்டுக்கு ரூ.10 ஆயிரம், கன்றுக்குட்டிக்கு ரூ.5,000 வசூலிக்கப்படும். மூன்றாவது முறை அதே மாடு பிடிபட்டால் மாடு மாநகராட்சிக்கு சொந்தம் என்று மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
