திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ எடுத்து வெளியிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிா்வாகம் எச்சரித்துள்ளது.
திருச்செந்தூா் கோயிலுக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வந்து செல்கின்றனா். கோயிலுக்கு வரும் சிலா் கோயில் வளாகம், கடற்கரைப் பகுதிகளில் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் வெளியிடுவது தற்போது அதிகரித்துள்ளது.
இத்தகைய செயல்கள் பக்தா்களை வேதனையடைய செய்வதால், கோயில் வளாகத்தில் இனி ‘ரீல்ஸ்’ எடுத்து வெளியிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதில், திருக்கோயில் வளாகத்தில் திரைப்பட பாடல்களுக்கு நடனமாடி விடியோ பதிவு செய்தல், சமூக வலைதளங்களில் வெளியிடுதல் போன்ற செயல்களில் எவரும் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில், காவல் துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
