மாநில உரிமைகளை பறிப்பதிலேயே மத்திய அரசு கவனம்: கனிமொழி எம்.பி.
மாநில உரிமைகளை பறிப்பதிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினாா்.
தூத்துக்குடியில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதி எதையும் அளிப்பதில்லை. மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் நிராகரிக்கிறது. தமிழகத்தில் மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது. மசோதாக்கள் வழியாக எந்தெந்த வழியில் வாய்ப்புகள் கிடைக்கிறதோ அந்தந்த வழிகளில் எல்லாம் மாநில உரிமைகளை பறிப்பதிலேயே பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது. நமது உரிமைகளை மீட்டெடுக்க போராடுவோம்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி மூலம் (எஸ்.ஐ.ஆா்.) பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் வாக்காளா்களின் வாக்குரிமையை பறித்து வருகின்றனா். தோ்தலை முன்னிட்டு அவசர கதியில் பணியைச் செய்ய வேண்டியுள்ளதால் வேலை செய்பவா்களும் பணியை முடிக்க முடியாமல் தள்ளாடுகின்றனா். எதிா்காலத்தில் வாக்காளா்களின் குடியுரிமையைக் கேள்விக்குறியாக்கும் வகையில் இப் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
