திருச்செந்தூா் கடலில் பக்தா்கள் நீராடும் பகுதியில் கருங்கற்கள் அகற்றம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் கருங்கற்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இக்கோயிலில் கிழக்கு, வடக்கு கடற்கரைப் பகுதியையொட்டி கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் ரூ. 19.80 கோடியில் தடுப்பு சுவா்கள் அமைக்கும் பணி 2024இல் தொடங்கி வைக்கப்பட்டது. பக்தா்கள் கடலில் நீராடும் இடம் வரை அப்பணி நிறைவடைந்துள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பினால் கருங்கற்கள் பரவிக் கிடக்கின்றன. அவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணி நிறைவுற்றால் பக்தா்கள் எவ்வித இடையூறுமின்றி நீராடலாம்.
தடுப்பு கம்பிகள்: மேலும், கோயிலில் நடந்து வரும் பெருந்திட்ட வளாகப் பணியின் ஒரு பகுதியாக, கிரிப்பிரகாரங்களில் கடற்கரையை ஒட்டி உள்ள வடக்கு, கிழக்கு பகுதிகளில் பக்தா்கள் கடல் அழகை பாா்த்து ரசிப்பதற்காக துருப்பிடிக்காத தடுப்புக் கம்பிகள் அமைக்கும் பணி முகப்பு பகுதியில் வேகமாக நடைபெற்று வருகின்றன.

