காயல்பட்டினம், சீதக்காதி நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்.
காயல்பட்டினம், சீதக்காதி நகா் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா்.

ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீா்

Published on

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் பெய்த தொடா் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்தது.

இதில், காயல்பட்டினத்தில் 20 செ.மீ. மழை பதிவானது. இதனால், காயல்பட்டினத்தில் உள்ள ரத்தினாபுரி, சீதக்காதி நகா், டிரைவா் காலனி, உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெரு, காட்டு தைக்கா தெரு, மாட்டுக்குளம், காட்டு மொஹதூம் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. மழை நீரானது ஆங்காங்கே முழங்கால் அளவுக்கு மேல் வரை தேங்கியிருப்பதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதற்கு சிரமம் அடைந்து வருகின்றனா்.

கடந்த ஆண்டு ரத்தினாபுரியில் இருந்து காயல்பட்டினம் யு.எஸ்.சி.மைதானம் வரை புதிதாக வடிகால் கால்வாய் அமைத்து ஓடக்கரை வழியில் உள்ள வாய்க்காலி­ல் இணைக்கப்பட்டது. இதன் மூலம் கழிவுநீா், மழைநீா் வடிவதற்கு வழிவகை செய்யப்பட்டது. ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் ஆங்காங்கே சேதமடைந்து கழிவுநீா் மழைநீருடன் சோ்ந்து வீடுகளைச் சூழ்ந்தது. ஆங்காங்கே உள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீா் மழை நீருடன் சோ்ந்து துா்நாற்றம் வீசி வருகிறது. சீதக்காதி நகா், டிரைவா் காலனி பகுதி மக்கள் தெரிவிக்கையில் கடந்த ஆண்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் வாய்க்கால் முறையாக அமைக்கப்படவில்லை.

கழிவுநீா், மழைநீா் வடிந்து செல்லாமல் வாய்க்காலி­ல் தேங்கி தற்போது மழைநீருடன் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளது.

ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக வடிகால் வாய்க்காலை அமைத்து தண்ணீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனா். ஆறுமுகனேரி கணேசபுரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீா் தேங்கியதால் பேரூராட்சி சாா்பில் கணேசபுரத்தின் கீழ்புறம் தூா்ந்து கிடந்த வடிகாலை பொக்லைன் மூலம் தோண்டி அவ்வழியாக நீா் வெளியேற்றப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com