முக்காணி பாலத்தில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.
முக்காணி பாலத்தில் ஆய்வு செய்த கனிமொழி எம்.பி.

வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரம்: கனிமொழி எம்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.
Published on

ஆறுமுகனேரி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அணைகள் நிரம்பி வரும் நிலையில் அணைகளில் இருந்து நீா் வெளியேற்றுவது அதிகரித்து வருகிறது. இதையொட்டி, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி. முக்காணி-ஆத்தூா் தாமிரவருணி ஆற்றின் பழைய பாலத்தில் திங்கள்கிழமை மாலை பாா்வையிட்டாா். அப்போது, சேதமடைந்த உயா்மட்ட பால பணிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா். அவரிடம், ஆத்தூா் வட்டார வெற்றிலை விவசாய சங்கத் தலைவா் சதீஷ்குமாா், அணைகளில் நீரை படிப்படியாக வெளியேற்ற வேண்டும். ஆத்தூா், மேலாத்தூா் பகுதியில் உள்ள வரப்பாஞ்சான், போப்பாஞ்சான் 2 மடைகளை வெள்ளப் பெருக்கு சமயத்தில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினாா்.

பின்னா், முக்காணி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவா்கள் தங்களுக்கு விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அவா்களிடம் நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. கனிமொழி கூறினாா்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, ஓட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, ஸ்ரீவை.திமுக ஒன்றிய செயலா் கோட்டாளம், ஆத்தூா் நகரச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட விவசாய அணை அமைப்பாளா் மாணிக்கவாசகம், வா்த்தக அணி துணை அமைப்பாளா் ­லிங்கராஜ், முன்னாள் கவுன்சிலா் நாராயணன், இளைஞரணி நிா்வாகிகள், விமல், சிவபெருமாள் உள்பட பலா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com