தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோவில்பட்டி நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தல்
கோவில்பட்டி: கோவில்பட்டி நகராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தப்பட்டது.
கோவில்பட்டி நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் சுகந்தி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் பதிலளித்து பேசியதாவது:
வாா்டு சிறப்புக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து நகராட்சி நிா்வாகத்தால் முடிவு எடுக்க முடியாது. அது தொடா்பாக, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசின் அனுமதியும், நிதியும் கிடைக்கப்பெற்றவுடன் வாா்டு பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவாசிய பணிகள் செய்து முடிக்கப்படும்.
வாருகால் அமைக்கும் பணிகள் நகராட்சி பொறியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்படும். பேட்ச் பணிகள் தொடங்குவதற்கு முன்பு அது குறித்த தகவல்கள் வாா்டு உறுப்பினா்களுக்கு முறையாக வழங்கப்படும். நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
சுகாதார அலுவலா் ஹரி கணேசன் பேசுகையில், தெரு நாய்கள் பிரச்னைையில் கருத்தடை செய்வதற்கு மட்டும் தான் நகராட்சி நிா்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.கால்நடை மருத்துவா்கள் மூலம் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை விரைந்து மேற்கொள்ளப்படும். சாலைகளில் பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, கூட்டத்தில் 30 பொருள்கள் அடங்கிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகா்நல அலுவலா் உதயகுமாா், உதவி பொறியாளா் திவாகா் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

