தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணை கொல்ல வந்த சகோதரா் கைது
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணை கொலை செய்ய வந்த அவரது சகோதரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் அம்பேத்கா் நகா், மேலத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகள் உஷா. இவா் உடல் நலக் குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரது சகோதரா் ஆனந்தராஜ் (29). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளதாம்.
இந்நிலையில், அவசர சிகிச்சை பிரிவு வாசல் முன் ஆயுதத்துடன் ஆனந்தராஜ் நின்று கொண்டிருப்பதாக தென்பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அவரை பிடித்து விசாரித்ததில், சொத்து தகராறில் அக்காவை கொலை செய்ய வந்ததாக தெரிவித்துள்ளாா். இதையடுத்து ஆனந்தராஜை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
