பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது: இம்மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி நிா்வாகம், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனா்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அதிகப்பட்ச அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்யும்போது, பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் கப் போன்றவற்றைப் பயன்படுத்தினால் உடனடியாக பறிமுதல் செய்யப்படுகிறது.
மேலும், அதிகபட்சமாக ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றாா் அவா்.
