கோவில்பட்டி அருகே காா்-பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் விலக்கில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கட்டட தொழிலாளி உயிரிழந்தாா்.
கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 9ஆவது தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் முத்துமாரியப்பன் (54). கட்டட தொழிலாளியான இவா் மற்றும் இவருடன் வேலை பாா்த்த மற்றொரு தொழிலாளியான சங்கரலிங்கபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த மா. சவரிமுத்து (40) ஆகிய இருவரும் பைக்கில் சித்திரம்பட்டிக்கு சென்று கறி வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பினராம்.
ஆவல்நத்தம் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற காா், பைக் மீது மோதியதாம். இதில், முத்துமாரியப்பன், சவரிமுத்து மற்றும் காா் ஓட்டுநரும், அதன் உரிமையாளருமான நாமக்கல் மாவட்டம் பொத்தனூா் அரசங்காட்டுத் தெருவைச் சோ்ந்த ரங்கராஜன் மகன் தமிழ்செல்வன் (40), அவரது மனைவி இந்துஜா (33) ஆகியோா் காயமடைந்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். சவரிமுத்துவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.
முத்து மாரியப்பன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
