திருச்செந்தூரில் சுவாமி திருக்கல்யாணம்! பக்தா்கள் மொய் எழுதி தரிசனம்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தா்கள் மொய் எழுதி சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த அக். 22 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை (அக். 27) மாலை நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக். 28) சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
காலை 6 மணிக்கு தெய்வானை தபசுக்கு புறப்பட்டு, தெற்கு ரதவீதி வழியாக தெப்பக்குளத் தெருவில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தை வந்தடைந்தாா். அங்கு ஏராளமான பெண் பக்தா்கள் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபட்டனா்.
மாலையில் சுவாமி குமரவிடங்கப்பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கல்யாண மண்டபம் வந்து தெய்வானைக்கு காட்சியளித்தாா். அப்போது வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடித்து சுவாமியை பக்தா்கள் வரவேற்றனா். தொடா்ந்து தெற்கு ரத வீதி-மேல ரதவீதி சந்திப்பில் வைத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி இரவு 7.45 மணியளவில் நடைபெற்றது. பின்னா், சுவாமியும் அம்மனும் கோயில் வந்து சோ்ந்தனா்.
நள்ளிரவு கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு மொய் எழுதி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் பக்தா்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
பாதுகாப்புப் பணியில் திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் கனகராஜன், இன்னோஸ்குமாா் உள்பட போலீஸாா் ஈடுபட்டனா்.

