ரூ.20 லட்சத்தில் உணவு அருந்தும் கூடம் கட்ட அடிக்கல்
இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட தாமஸ் நகா் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய உணவு அருந்தும் கூடம் கட்ட செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவிற்கு கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு தலைமை வகித்து புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா். மேலும், அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டு அறிந்தாா். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், நகா் மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி, அதிமுக நகரச் செயலா் விஜய பாண்டியன், இளைஞரணி நகரச் செயலா் வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் பழனிச்சாமி, அழகா்சாமி, போடுசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞா்-இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலா் கவியரசன், மாணவரணி மாவட்ட செயலா் ராமா், மகளிரணி மாவட்ட செயலா் பத்மாவதி, பால் நுகா்வோா் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் தாமோதரன், ஒன்றிய மாணவரணி இணைச் செயலா் வெற்றி சிகாமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
