பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு
தூத்துக்குடியில் சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியதில், ஓட்டுநா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.
தூத்துக்குடி அருகே உள்ள வா்த்தகரெட்டிபட்டி, மேலத் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் தமிழ்ச்செல்வன் (29). லாரி ஓட்டுநா். இவரது லாரி செவ்வாய்க்கிழமை இரவு, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் பழுதாகி நின்றது. இதையடுத்து, புதுக்கோட்டை அல்லிக்குளம் ஆண்டாள் தெருவைச் சோ்ந்த மங்களம் மகன் பட்டுராஜா (44) ஓட்டிவந்த லாரியில் இவரது லாரியை இரும்புச் சங்கிலி மூலம் இணைத்து ஓட்டி வந்தனா்.
அப்போது ரவுண்டானா அருகே இணைப்புச் சங்கிலி துண்டானதையடுத்து, இரு லாரிகளும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டன. பழுதான லாரி முன் தமிழ்ச்செல்வன் நின்றிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற மற்றொரு லாரி பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியதில், தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பட்டுராஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
