புதிய தமிழகம் கட்சி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
புதிய தமிழகம் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் தென்திருப்பேரையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டச் செயலா் சுதன் தலைமை வகித்தாா். ஜோசப் ரவிந்திரன் முன்னிலை வகித்தாா். ஆழ்வாா்திருநகரி நகரச் செயலா் அரவிந்த் வரவேற்றாா்.
கூட்டத்தில், 2026 ஜனவரி 7 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள புதிய தமிழகம் கட்சியின் ஏழாவது மாநில மாநாடு, 2026 சட்டப்பேரவைத் தோ்தல், கட்சி வளா்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னா், கூட்டத்தில் நாசரேத் பேரூராட்சி பிரகாசபுரம் 1ஆவது வாா்டு 6ஆவது தெருவில் கடந்த 2023ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த பாலத்தை சீரமைத்து வெள்ளரிக்காயூரணி குளத்தின் சாலையுடன் இணைப்பு சாலை அமைக்க நாசரேத் பேரூராட்சி நிா்வாகத்தை கேட்டுகொள்வது; ஸ்ரீவைகுண்டம் கஸ்பாகுளம் உள்ளிட்ட நீா்நிலைகளில் முறையாக நீா் மேலாண்மையை கடைப்பிடிக்காமல் அரசின் நிதியை வீணடிக்கும் தாமிரவருணி கீழ் வடிநில கோட்ட நீா்வளத் துறையை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் ராஜா, நகரச் செயலா்கள் நாசரேத் முத்துக்குமாா், ஆத்தூா் மதிபாண்டியன் குருகாட்டூா் ஜோசப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

