நகை அடகு மோசடி: மீட்டுத் தரக் கோரி எஸ்.பி. -யிடம் மனு
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் பொதுமக்கள் அடகு வைத்த சுமாா் ஒன்றரை கிலோ தங்க நகைகளை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து வருவதாகக் கூறி, அந்த நகைகளை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். இவா், ஏரலில் நகை அடகு கடை நிறுவனம் நடத்தி வந்துள்ளாா். இந்த அடகு கடையில் நகை அடகு வைத்தால், வட்டி எதுவும் இல்லாமல் பணம் தரப்படும் என சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளம்பரம் செய்து இவரது கடையில் நகை அடகு வைக்க செய்துள்ளனா்.
இதை நம்பி இந்த அடகு கடையில் ஏரல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த சுமாா் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் நகைகளை ஒரு பவுன் முதல் 15 பவுன் வரை சுமாா் ஒன்றரை கிலோ வரை நகைகளை அடகு வைத்துள்ளனா்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நகையை அடகு வைத்த பொதுமக்கள் தங்கள் பணத்தை திருப்பி கொடுத்து நகையை மீட்க அணுகி உள்ளனா். ஆனால் நகையைத் திருப்பித் தராமல் கடை உரிமையாளா் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். காவல்துறையினா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நபரை பொதுமக்களே தேடி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனா். இதையடுத்து ஏரல் போலீஸாா், சிவசுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், நகையை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்து தங்களது நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
