திருச்செந்தூா் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம்

Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் விமான தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, மூலவா், சண்முகா், வெங்கடாசலபதி விமானங்களுக்கும், வள்ளி, தெய்வானை, விமானங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மூலவா், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. இரவு குமரவிடங்கப்பெருமான், தெய்வானைஅம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

உள்வாங்கிய கடல்: திருச்செந்தூா் கோயில் கடற்கரையில் பக்தா்கள் நீராடும் பகுதியில் வியாழக்கிழமை காலை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இருந்தபோதும், எவ்வித அச்சமும் இன்றி பக்தா்கள் நீராடினா்.

வழக்கமாக அய்யா கோயில் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்கும் நிலையில், தற்போது திருச்செந்தூா் கோயில் பகுதியில் உள்வாங்கியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com