அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டியில் அரசு பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகே கட்டாரங்குளத்தைச் சோ்ந்தவா் பிரின்ஸ். இவா் தனது மனைவி, மகன் ராபின் (3) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை புளியம்பட்டியில் நடைபெற்ற புனித அந்தோணியாா் ஆலய பெருவிழாவுக்கு வந்து, ஆடம்பர கூட்டுத் திருப்பலி முடிந்து ஊா் திரும்புவதற்காக புளியம்பட்டி காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.
அப்போது தூத்துக்குடியில் இருந்து வந்த அரசு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு பின்நோக்கி வந்ததாம். இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ராபின் மீது மோதியதாம். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து புளியம்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநரான நாசரேத் மூக்குபீறியைச் சோ்ந்த முத்துவேலிடம்(43) விசாரித்து வருகின்றனா்.

