சிந்தலக்கரையில் கழிவுநீா் வாருகால் அமைக்க வலியுறுத்தல்
சிந்தலக்கரை கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் கழிவுநீா் வாருகால் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிந்தலக்கரை கிராமத்தில் வடக்கு தெரு பகுதியில் கழிவுநீா் வாருகால் வேண்டி அளித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில், புதிய வாருகால் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான பணி கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய போது அப்பகுதியைச் சோ்ந்த தனிநபா் ஒருவா் பணி செய்யவிடாமல் தடுத்ததையடுத்து தற்போது வரை அதற்கான பணிகள் தொடங்கவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் கழிவுநீருடன் மழை நீரும் வீட்டின் முன் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, கழிவுநீா் வாருகால் அமைக்கும் பணியை தொடங்கக் கோரி அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனா்.
அவா்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஸ்டீபன் ரத்தினகுமாா், திட்டமிட்டபடி வாருகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனா்.

