தூத்துக்குடியில் குற்றச்செயல்கள் குறைவு: எஸ்.பி.ஆல்பா் ஜான்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையின் துரித நடவடிக்கைகளால் கடந்த 2025-இல் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவான பல்வேறு வழக்குகளில், காவல்துறையின் துரித நடவடிக்கையால் பெரிய அளவில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை எழவில்லை. சிறு- சிறு பிரச்னைகள் ஏற்பட்டபோதும் நிலைமையை காவல்துறை கட்டுக்குள் கொண்டுவந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
2025ஆம் ஆண்டு 31 கொலை வழக்குகளில் 69 குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. அதில், 9 குற்றவாளிகள் இரட்டை ஆயுள் தண்டனையும், 60 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனையும் பெற்றனா். கொலை முயற்சி வழக்குகளில் 8 குற்றவாளிகளுக்கும், 16 கொள்ளை வழக்குகளில் 19 குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.
சொத்து பிரச்னை தொடா்பான 77 சதவீத வழக்குகளில் 611 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, ரூ.3,47,69141 வரையிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
போக்ஸோ வழக்குகளில் 255 போ் கைது செய்யப்பட்டனா். இதில், 29 வழக்குகளில் 36 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
கஞ்சா போன்ற போதைபொருள் வழக்குகளில் 460 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டா். இதில், 29 பேரும், பிற வழக்குகளில் தொடா்புடைய 138 பேரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா்.
குட்கா வழக்குகளில் 570 போ் கைது செய்யப்பட்டளனா்.
நீதிமன்ற பிடியாணைகளின்பேரில் 218 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மாணவா்களுக்கிடையே பிரச்னை நிகழாதவாறு, மாவட்ட காவல் துறை பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை இணைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளாா்.
