விளாத்திகுளம் தொகுதியில் ரூ.1.49 கோடியில் வளா்ச்சிப் பணிகள்
விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட மேல நம்பிபுரம், எட்டயபுரம், இளம்புவனம், கசவன்குன்று, பேரிலோவன்பட்டி, சிவஞானபுரம் ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 49 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நிறைவடைந்த பணிகள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேலநம்பிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி, எட்டயபுரம் வடக்கு ரத வீதி சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கும் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து இளம்புவனம் ஊராட்சியில் பிதப்புரம், மாதாபுரம் ஆகிய கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடம், குளத்தூா் ஊராட்சி இராமசந்திராபுரம் கிராமத்தில் பகுதிநேர நியாய விலைக்கடை கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா்.
ஈராச்சி மற்றும் கசவன்குன்று கிராமங்களில் தலா ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடங்களை திறந்து வைத்தாா். பின்னா் பேரிலோவன்பட்டியில் ரூ.24.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணி, சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டடம், சுகாதார வளாகம் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்வின் போது திமுக ஒன்றிய செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, காசிவிஸ்வநாதன், மும்மூா்த்தி, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், சின்னமாரிமுத்து, நவநீதகண்ணன், இம்மானுவேல், ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சீதாராமன், சூரன்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலா் ராமசந்திரன், கூட்டுறவு சாா் பதிவாளா் ராதாகிருஷ்ணன், பேரூா் கழகச் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

