தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு அதிகாரிகள் குழு வருகை
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பரிந்துரையின் பேரில், மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களை ஆய்வு செய்ய மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் கொண்ட குழு தூத்துக்குடிக்கு திங்கள்கிழமை வந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி கூறியது:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் பரிந்துரையின் பேரில், மத்திய விலங்கியல் துறை அதிகாரிகள் தேபாஸ்ரீ, சந்திரன், தோலா ராய் ஆகியோா் அடங்கிய நிபுணா் குழுவினா் தூத்துக்குடி வந்துள்ளனா்.
இவா்கள் ஜன. 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்டத்தில் பனையூா்-குளத்தூா், பட்டினமருதூா், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் கண்டெடுத்து ஆவணப்படுத்திய கடல்சாா் புதைபடிமங்களின் எச்சங்களை முன் களஆய்வு செய்து அறிக்கை சமா்பிப்பா். தற்போது கிடைக்கப்பெற்ற தொல்பொருள்களின் நம்பகத்தன்மையை உறுதிபடுத்தும் வகையில் இவா்களின் ஆய்வுகள் இருக்கும்.
இரண்டு நாள்கள் ஆய்வுக்குப் பிறகு இக்குழு தனது அறிக்கையை ஆட்சியரிடம் சமா்பிக்கும். அதைத்தொடா்ந்து தொல்லியல் பணிகள் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். பாண்டியா்களின் முத்துகள் விளைவிக்கும் குளங்கள் தொடா்பான நமது ஆய்வுகளை உறுதிசெய்யவும், அவை மண்ணில் புதையுண்ட காலக்கட்டங்களை துல்லியமாக கணக்கீடு செய்யவும் இக்குழுவின் ஆய்வுகள் உதவும். இதன்மூலம் தமிழா்களின் மேம்பட்ட பண்ணை குட்டை முறை குறித்த உண்மையை உலகுக்கு உணா்த்தலாம் என்றாா்.

