‘வெள்ளத்தில் வீடுகளை இழந்தோருக்கு வீடுகட்ட தவணைத் தொகை வேண்டும்’
தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு மானியத் தவணைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 13ஆவது வாா்டு உறுப்பினா் ரா.உச்சிமகாளி ராமகிருஷ்ணன் தலைமையில், அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதன் விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 17.12.2023இல் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்த எங்களுக்கு 2024இல் தமிழக அரசு வீடு கட்ட அரசாணை வழங்கியது.
அதன்படி, எங்கள் பேரூராட்சிப் பகுதிக்கு 49 வீடுகள் வழங்கப்பட்டன. அரசாணையை பெற்ற நாங்கள் கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தோம். இதில் முதல் தவணைத்தொகையை பெரும் போராட்டத்துக்குப் பின்னரே பெற்றோம்.
அடுத்தக் கட்ட தவணைத்தொகை வராததால் கடந்த டிச.3ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் மனு அளித்தோம். இதுவரை தவணைத்தொகை வராததால் வீடு கட்ட முடியாமலும், குடியிருக்க வீடு இல்லாமலும், வாங்கிய கடனுக்கு வட்டிக் கட்ட இயலாமலும் சிரமத்தில் உள்ளோம்.
எனவே, மீதமுள்ள தவணைத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.
