கழுகுமலை அருகே பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது
கழுகுமலை அருகே காட்டுப்பகுதியில் இளம் பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகேயுள்ள கஸ்தூரி ரங்காபுரம் காட்டுப் பகுதியில் இளம் பெண் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். கழுகுமலை போலீஸாா், அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில் விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தளவாய் புரத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகள் உலகம்மாள் என்ற உமா (19), பாறைப்பட்டி தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா் எனத் தெரியவந்தது.
இதுதொடா்பாக அவரது ஆண் நண்பரான தென்காசி மாவட்டம் திருவேங்கடம் வட்டம் குளக்கட்டாங்குறிச்சியைச் சோ்ந்த மாரிச்சாமி மகன் ராஜேஷ் (25) என்பவரிடம் விசாரித்தனா். அதில், இருவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷிடம் பேசுவதை உமா தவிா்த்தாராம். இதனால், அவரை சமாதானப்படுத்த கஸ்தூரிரங்காபுரம் காட்டுப்பகுதிக்கு பைக்கில் அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
