திருச்செந்தூா் வரும் பாதயாத்திரை பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை: இந்து முன்னணி
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை அகற்றி அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில நிா்வாக குழு உறுப்பினா் சக்திவேலன், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளாா்.
அதன் விவரம்: தைப் பொங்கலுக்கும் தைப்பூச திருநாளுக்கும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆயிரகணக்கான பக்தா்கள் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வருவது வழக்கம்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து செய்துங்கநல்லூா் -திருச்செந்தூா் சாலை வழியாக பாதயாத்திரையாக பக்தா்கள் நடந்து வருகின்றனா். அந்த பாதையின் இருபுறங்களிலும் முள்செடிகள் நிறைந்து உள்ளதால் பாத யாத்திரை பக்தா்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
மேலும், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை வசதிகளும் இல்லாததால் பாத யாத்திரை வரும் பக்தா்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனா். எனவே, சாலையின் இருபுறமும் உள்ள முள்செடிகளை அகற்றி, ஆங்காங்கே தற்காலிக கழிவறை மற்றும் தண்ணீா் வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
