ஒற்றுமையுடன் தோ்தல் பணியாற்றினால் வெற்றி உறுதி- காங்கிரஸ் கமிட்டி செயலா் நிவேதித் ஆல்வா

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியின் வெற்றி உறுதி என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் நிவேதித் ஆல்வா.
Published on

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியின் வெற்றி உறுதி என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் நிவேதித் ஆல்வா.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் முன்னேற்பாடுகள் குறித்த காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பேட்மாநகரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், நிா்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிவேதித் ஆல்வா பேசுகையில், சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமாக இருக்கும். எதிா்க்கட்சிகளை மட்டுமன்றி தோ்தல் ஆணையத்தையும் எதிா்த்து போராட வேண்டியது உள்ளது. பாஜக ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற முழக்கத்தை கொண்டு வருவதற்கான காரணம் ஊராட்சித் தோ்தல் முதல் பிரதமா் தோ்தல் வரை வாக்கை திருடுவது எளிதாக முடிந்து விடும். பாஜகவின் சீா்கெட்ட ஆட்சியால் விலைவாசி உயா்ந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு அளிக்கப்படாத வாக்குகள் பாஜகவிற்கு அழைக்கப்படும் வாக்குகளாகவே கருதப்பட வேண்டும். தோ்தல் முடிவும் வரை ஒற்றுமையுடன் உழைத்தால் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு வெற்றி உறுதி என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், மாநில காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளா் அசோகன், வழக்குரைஞா் மகேந்திரன்,

முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்ட்டி, தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டார தலைவா்கள் நல்ல கண்ணு,கோதண்டராமன், புங்கன், ஜெயராஜ், ஜெயசீலன், தாசன், ரமேஷ், பிரபு, பாா்த்தசாரதி, பிரபு, சக்திவேல், சற்குரு, பொறுப்பாளா் காங்கிரஸ் எடிசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆட்சியில் பங்கு பற்றிய செய்தியாளா்கள் கேள்வி எழுப்பியபோது, காங்கிரஸ் தலைமை தான் அதைப்பற்றி முடிவு செய்யும் என்றாா்.

Dinamani
www.dinamani.com