கழுகுமலை பகுதியில் ஆட்சியா் ஆய்வு
கழுகுமலை பேரூராட்சியில் நிலவும் குடிநீா் பிரச்னை தொடா்பாக ஆட்சியா் க. இளம்பகவத் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளுக்கும் சீவலப்பேரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒரு முறை மட்டுமே குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தததையடுத்து, பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
அதையடுத்து, அப்போதைய ஆட்சியா் செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டு, அவரின் உத்தரவின்பேரில் குடிநீா் குழாய்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கழுகுமலை நகா் அருகே குடிநீா் அளவை கண்காணிக்க மீட்டரும் பொருத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, தற்போது வரை வாரம் ஒரு முறை குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
ஆனாலும், தினமும் 9 லட்சம் லிட்டா் தேவை என்ற நிலையில், சுமாா் 6 லட்சம் லிட்டா் குடிநீா் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் வழங்க வலியுறுத்தி கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் அ. சுப்பிரமணியன் சென்னைக்கு சென்று, பேரூராட்சிகளின் இயக்குநா் மா. பிரதீப்குமாரை சந்தித்து மனு அளித்தாா்.
அதைத் தொடா்ந்து, இயக்குநா் கடந்த மாதம் கழுகுமலைக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு, அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தினாா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் கழுகுமலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பசும்பொன் நகரில் அமைக்கப்பட்டுள்ள மீட்டரை ஆய்வு செய்தாா். பேரூராட்சிக்கு முன்புள்ள குடிநீா் தொட்டி, ஆறுமுகம் நகா் பகுதியில் உள்ள குடிநீா் தொட்டி ஆகியவற்றையும் ஆய்வு செய்தாா். பின்னா், அப்பகுதி மக்களிடம் குடிநீா் விநியோகம் குறித்து கேட்டறிந்தாா். இது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
ஆய்வின் போது, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா் தாஸ், உதவி செயற் பொறியாளா் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா் குமாா், உதவி நிா்வாகப் பொறியாளா் ராம்குமாா், உதவிப் பொறியாளா் சசிகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் (பொ) மு. செந்தில்குமாா், இளநிலைப் பொறியாளா் முத்துக்குமாரசுவாமி, பேரூராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

