தூத்துக்குடியில் நாளை மீனவா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்கள்
தூத்துக்குடியில், தமிழ்நாடு மீனவா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (ஜன.10) நடைபெற உள்ளதாக அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீன்பிடி மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் 18- 60 வயது வரை உள்ள மீனவ மக்கள் தமிழ்நாடு மீனவா் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய, தமிழ்நாடு மீனவா் நல வாரிய தலைவா் ஜோசப் ஸ்டாலின் ஏற்பாட்டில் சிறப்பு முகாம்கள் தூத்துக்குடியில் சனிக்கிழமை (ஜன.10) காலை 9 மணிக்கு திரேஸ்புரம் பகுதியிலும், காலை 10 மணிக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலும், காலை 11 மணிக்கு பாத்திமா நகா் ஆலய வளாகத்திலும் நடைபெற உள்ளது.
இம்முகாம்கள் எனது தலைமையில், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடைத்துறை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில், மேயா் ஜெகன் பெரியசாமி, துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலா் ஆனந்தசேகரன் உள்பட பலா் பங்கேற்கின்றனா்.
முகாம்களில் பதிவு செய்வதற்கு, புகைப்படம், குடும்ப அட்டை , ஆதாா் அட்டை நகல்கள், வாக்காளா் அடையாள அட்டை, வாரிசுதாரா்களின் ஆதாா் அட்டை நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

