உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆவணங்கள் ஒப்படைப்பு போராட்டம்: 82 போ் கைது
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் கண்மாய் வழியாக உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, ஆதாா், வாக்காளா் அட்டைகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பெண்கள் உள்ளிட்ட 82 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தக் கிராமத்தில் உள்ள 116 ஏக்கா் பரப்பிலான பெரியகுளம் மூலம் 120 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இக்கிராமத்தின் அருகே தனியாா் சூரிய மின்சக்தி உற்பத்தி அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்வதற்காக உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், பெரியகுளம் கண்மாயில் மட்டும் 5 மின் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்கோபுரங்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும், எனவே, மீண்டும் மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது எனக் கூறி கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இதனிடையே, உயா்நீதிமன்ற உத்தரவு பெற்று, கடந்த 13ஆம் தேதி உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதைக் கண்டித்து கண்மாயில் உள்ள மின்கோபுரங்களில் ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போராட்டம் நடைபெற்றுவந்தது.
இந்நிலையில், கிராம மக்கள் திங்கள்கிழமை காலை கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு, வாக்காளா் அட்டை, ஆதாா், குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதாகக் கூறி தரையில் வீசினா். கோரிக்கையை வலியுறுத்தி முழுக்கமிட்டனா்.
காவல் ஆய்வாளா் ஆனந்த்குமாா், போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போலீஸாா் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, 51 பெண்கள் உள்ளிட்ட 82 பேரை போலீஸாா் கைது செய்தனா். அங்கு கிடந்த அடையாள அட்டைகளை வருவாய்த் துறை அலுவலா்கள் சேகரித்து, சூரியமினுக்கன் கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனா்.

