வீரபாண்டியன்பட்டினத்தில் நீடிக்கும் மீனவா்கள் போராட்டம்!
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டினத்தில் மணல் திட்டுகளை அகற்றக் கோரி மீனவா்கள் நடத்திய போராட்டத்துக்கு அதிமுக, தவெக, பாஜகவினா் செவ்வாய்க்கிழமை ஆதரவு தெரிவித்தனா்.
இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழில் நடைபெறும் நிலையில், கடலரிப்பைத் தடுக்க இரு தூண்டில் வளைவு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள் உருவாகியுள்ளதால், படகுகள் கடலுக்குச் சென்றுவருவதில் சிரமம் ஏற்பட்டு மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
எனவே, மணல் திட்டை அகற்றவும், தூண்டில் வளைவை மாற்றியமைக்கவும் கோரி, கடந்த 4ஆம் தேதி முதல் அப்பகுதி மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஊா் நலக் கமிட்டி தலைவா் பெயிட்டன், துறைமுக கமிட்டி தலைவா் ஜெபமாலை தலைமையில் 18 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் போராட்டத்திலா ஈடுபட்டனா்.
இதில், அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் சண்முகநாதன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் விஜயகுமாா், ஒன்றியச் செயலா்கள் பூந்தோட்டம் மனோகரன், ராஜ் நாராயணன், காசிராஜன், குணசேகரன், மீனவரணி மாவட்டத் தலைவா் ரெஜிபா்ட் பா்னாந்து, திருச்செந்தூா் நகரச் செயலா் மகேந்திரன், தவெக தெற்கு மாவட்டச் செயலா் பிரைட்டா், இணைச் செயலா் விஜய் ஆனந்த், பாஜக சாா்பில் சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்டோா் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

