தவறான செய்தி குறித்து அச்சம் வேண்டாம்: தூத்துக்குடி காவல் துறை
வாடிக்கையாளா் சேவை மையத்தில் இருந்து 6 இலக்க நம்பரில் அழைப்பு வருகிறது, அந்த அழைப்பை ஏற்றால் கைப்பேசி வெடித்து விடும் என தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப் ஆடியோ தவறாக பரப்பப்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட காவல்துறை விளக்கமளித்தது.
தற்போது வாட்ஸ்அப்பில் ‘ஹலோ நான் தூத்துக்குடியில் இருந்து பேசுகிறேன், கஸ்டமா் காலில் 5 அல்லது 6 நம்பரிலிருந்து அழைப்பு வருது, அதை யாரும் அட்டன் பண்ண வேண்டாம், அதை அட்டன் பண்ணினால் பிளாஸ்ட் ஆகி கைப்பேசி வெடித்து விடும், தூத்துக்குடியில் 27 போ் செத்துட்டாங்க, இத சோ் பண்ணுங்க’ என வாட்ஸ்அப்பில் ஆடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்ற எந்தவிதமான அசம்பாவிதம் நடைபெறவில்லை எனவும், இது பழைய வாட்ஸ்அப் ஆடியோ எனவும், அந்த ஆடியோ தவறாக தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் எனவும், இந்த வாட்ஸ்அப் ஆடியோவை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்கிறது.
இதுபோல பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலோ வாட்ஸ்அப்பில் தவறான தகவலை பரப்புவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மீறி மேற்படி ஆடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
