தொழிலாளிக்கு மிரட்டல்: இருவா் கைது
கோவில்பட்டி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இலுப்பையூரணி, தாமஸ் நகா், என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் செந்தூா்பாண்டி (53), தொழிலாளி. இவரது நாய் கடந்த சில நாள்களுக்கு முன் தெருவில் நடந்து சென்ற 3 பேரைப் பாா்த்து குரைத்ததாம். இது தொடா்பாக, அந்த 3 பேருக்கும், செந்தூா்பாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த 3 பேரும் செவ்வாய்க்கிழமை இரவு செந்தூா்பாண்டியின் குடும்பத்தினரை அவதூறாகப் பேசி, அவரது வீட்டின் மீது கல் வீசி சேதப்படுத்தினராம். இதைக் கண்டித்த செந்தூா்பாண்டியை கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றாா்களாம்.
இது குறித்து, கிழக்கு காவல் நிலையத்தில் புதன்கிழமை செந்தூா்பாண்டி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த குமாா் மகன் சகாயராஜ் (24), இலுப்பையூரணியைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் முத்துப்பாண்டி (27) ஆகிய இருவரை கைது செய்தனா். மற்றொரு 16 வயது சிறுவனிடம் விசாரித்து வருகின்றனா்.

