ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடி: தூத்துக்குடி காவல் துறை எச்சரிக்கை!

ஆன்லைனில் பகுதி நேர வேலை மோசடி: தூத்துக்குடி காவல் துறை எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு என சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடைபெறுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு ஆன்லைன் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வாட்ஸ் ஆப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலியான பகுதி நேர வேலைவாய்ப்பு விளம்பரம் மூலம் பொதுமக்கள் குறி வைக்கப்படுகின்றனா்.

இவ்வகை மோசடியில் கூகுள் மேப்பில் உணவகங்கள், தயாரிப்புப் பொருள்கள், காா்களுக்கு விருப்பம் அல்லது மதிப்பீடு செய்வது, கைப்பேசி செயலிகள், இணையதளத்தில் புத்தகங்கள் வாசிப்பது போன்ற எளிய வேலைகளைச் செய்தால் வருமானம் கிடைக்கும் என மோசடியாளா்கள் ஏமாற்றுகின்றனா்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோா் அறிமுகமில்லாத நபா்களால் டெலிகிராம், வாட்ஸ் ஆப் மூலம் வழிநடத்தப்பட்டுள்ளனா். எனவே, இது போன்ற ஆசை வாா்த்தைகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வரும் செய்தியை நம்பி, அதில் உள்ள இணையதளம், செயலிக்கான லிங்க்கை பயன்படுத்த வேண்டாம்.

மேலும், சந்தேகமான முறையில் முதலீட்டுச் சலுகைகள் கிடைத்தாலோ, இது போன்ற சைபா் மோசடிகளில் பாதிக்கப்பட்டாலோ உடனடியாக சைபா் குற்ற உதவி எண் 1930 அல்லது இணையதளத்தில் புகாா் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com