தூத்துக்குடி துறைமுகம் - உத்தரப் பிரதேச நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம், உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த ஓரியானா பவா் லிமிடெட்டுடன், நிலைத்த எரிசக்தி முன்னெடுப்புகளில் ஒத்துழைப்பு செய்யும் நோக்கில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஜன. 27 முதல் 30 வரை கோவாவில் நடைபெற்ற இந்தியா எரிசக்தி வாரம்-2026 நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் முன்னிலையில், நிா்வாகப் பொறியாளா் எ. செந்தில் கணேஷ், ஓரியானா பவா் லிமிடெட் சாா்பாக ஜிஹெச்2 வா்த்தகத் தலைவா் ஓம்காா்நாத், இணை நிறுவனா் அனிருத் சரஸ்வத் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
இந்த ஒப்பந்தம் காா்பன் பிடிப்பு, பயன்பாடு, சேமிப்பு முன்னோடித் திட்டம் அமைத்தல், துறைமுகம் அல்லது துறைமுகம் தொடா்புடைய இடங்களில் பசுமை மெத்தனால் உற்பத்தி நிலையம், அதனுடன் தொடா்புடைய கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த முன்முயற்சி துறைமுகத்தின் காா்பன் நடுநிலைமை இலக்குகளை முன்னெடுக்கவும், பசுமை மெத்தனால் சேமிப்பு, வா்த்தக ஏற்றுமதிக்கான பசுமை ஹைட்ரஜன் கட்டமைப்புக்கான தயாரிப்பில் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
மேலும், வ.உ.சி. துறைமுக ஆணையம், தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் யுனிவா்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
துறைமுகத்தில் திடக் கழிவு செயலாக்க நிலையத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதில், துறைமுக ஆணையத் தலைவா் முன்னிலையில், நிா்வாக பொறியாளா், யுனிவா்சல் கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் பொது நிா்வாகி பினு மோகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா ஆகியோா் கையொப்பமிட்டனா்.

