வியாபாரி கொலை: முதியவா் கைது
கோவில்பட்டியில் வியாபாரி கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சாஸ்திரி நகா் முதல் தெருவைச் சோ்ந்த சேதுராமன் மகன் மாரீஸ்வரன் (43). கோலப்பொடி வியாபாரம் செய்துவந்த இவரும், வீட்டருகே வசித்துவரும் முத்தையா மகன் ராமசாமி (76) என்பவரும் சோ்ந்து மது குடிப்பது வழக்கமாம். வெள்ளிக்கிழமை மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் மாரீஸ்வரனை ராமசாமி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், மாரீஸ்வரன் உயிரிழந்தாா்.
சடலத்தை மேற்கு காவல் நிலைய போலீஸாா் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நிகழ்விடத்தை காவல் கண்காணிப்பாளா் ஜகநாதன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டனா். போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசாமியை சனிக்கிழமை கைது செய்தனா்.
அவரது புதிய கைப்பேசி திருடுபோனதாகவும், அதுதொடா்பான தகராறில் இக்கொலை சம்பவம் நிகழ்ந்ததாகவும், காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

