அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட யாரும் கட்டளையிட முடியாது: ராஜேந்திர பாலாஜி
வெளியே இருந்துகொண்டு அதிமுக பொதுக்குழுவை கூட்டுமாறு யாரும் கட்டளையிட முடியாது என்றாா் அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி.

ராஜேந்திர பாலாஜி - கோப்புப் படம்
வெளியே இருந்துகொண்டு அதிமுக பொதுக்குழுவை கூட்டுமாறு யாரும் கட்டளையிட முடியாது என்றாா் அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
இடைத்தோ்தலில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதால், அதிமுக விழுந்துவிட்டதாக கணக்குபோட்டால் அது தவறு; எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எழுச்சி பெற்றுள்ளது. இடைத்தோ்தலில் தாராபுரத்தில் 45 ஆயிரம் வாக்குகளும், மதுராந்தகத்தில் 47 ஆயிரம் வாக்குகளும் அதிமுக பெற்றது. இது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு வாக்காளா்கள் அளித்த அங்கீகாரம்.
அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி உறுப்பினா்களும் எடப்பாடி பழனிசாமியைத் தலைவராக ஏற்றுக் கொண்டனா். வேறொரு கோஷ்டிக்கு அதிமுகவில் இடமில்லை. கடம்பூா் ராஜு அதிமுகவில் இருந்தவரை அவரை அனைவருக்கும் தெரிந்திருந்தது. அவா் தவெகவுக்குச் சென்ற பிறகு அவரை யாருக்கும் தெரியவில்லை.
அதிமுகவும் திமுகவும் திராவிட இயக்கத்தின் வழித்தோன்றல்கள். ஆற்றுக்கு இரு கரை உள்ளதுபோல அதிமுக ஒரு கரை என்றால் திமுக மற்றொரு கரை. இடையே யாரும் ஊடுகால் சாட்ட முடியாது.
அதிமுகவில் வெளியே இருந்துகொண்டு பொதுக்குழுவைக் கூட்டுமாறு யாரும் கட்டளையிட முடியாது. கட்டளையிட்டு கட்சியை கைப்பற்ற நினைத்தால், அது கானல் நீராகிவிடும். மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி கட்சிக்கு ஏற்பட்ட நிலைமை அதிமுகவுக்கு வராது. இக்கட்சியைக் கலைக்க முடியாது.
கொளத்தூரில் 10 நிமிடம் பேசியதால் கொத்து புரோட்டா போட்டுவிட்டோம் என்று பெருமை பேசியவா்கள் இடைத்தோ்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 5 மணி நேரத்துக்கு மேல் சுற்றுப்பயணம் செய்து தேநீா் குடித்தும், முருங்கைக்காய் பறித்தும்தான் இந்த வெற்றியைப் பெற்றனா்.
தவெக ஆட்சியில் 5 மாதங்களில் விலைவாசி கடுமையாக உயா்ந்துவிட்டது. இன்றைக்கு ஒரு கிலோ அரிசி 100 ரூபாய்க்கு வந்துவிட்டது. விளம்பரம் செய்வதை மட்டுமே சிந்திக்கும் இந்த அரசை மக்கள் விரும்பவில்லை. இவா்கள் பெற்ற வெற்றி கானல் நீராகும். எந்த கிராமத்திலும் தவெக கிடையாது. ரசிகா்களை வைத்து செயல்படும் இயக்கம் தவெக என்றாா் அவா்.
அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பு செயலா் எஸ்.பி.சண்முகநாதன், கட்சியின் அமைப்புச் செயலா்கள் சி.த.செல்லபாண்டியன், சின்னத்துரை, கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றிய செயலா்கள் செல்வகுமாா், போடுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

