வேதாரண்யம், நவ. 1: வேதாரண்யம் பகுதியில் காற்றாலைகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்ய இரு இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்ட முயற்சிகளை அரசு தொடர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியின் கிழக்கு, தெற்குப் பகுதி மாறுபட்ட கடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியின் கடலோரத்தில் வீசும் காற்றின் தன்மை வேகமானதாக உள்ளது.
குறிப்பாக, ஆண்டுதோறும் அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், வடகிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. பின்னர், தென் மேற்கு மற்றும் தெற்கு திசைகளிலிருந்து காற்று மாறி வீசுகிறது.
இங்கு ஏப்ரல் மாதம் தொடங்கி பல மாதங்கள் அதிவேகத்தில் கடல் காற்று வீசும். இதனால், பல நேரங்களில் கடல் நீர் உப்பளப் பரப்பு மற்றும் தாழ்வான நிலப்பகுதிகளிலும் புகுந்துவிடும் அளவுக்கு அதன் சக்தி வெளிப்படும். சில இடங்களில் புழுதிப் புயல் போன்று காணப்படும்.
இந்தக் காலக் கட்டத்தில் விசாகப் பெருவெள்ளக் காற்றும் உருவாகிறது. மற்றப் பகுதிகளைவிட இதுபோன்ற மாறுபட்ட சூழல் இங்குதான் உள்ளது என்பதை, வேறு சில காரணங்களுக்காக மத்திய அரசு அமைத்த ஆய்வுக் குழுவின் அறிக்கை முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, தனியார் உதவியுடன் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சியில் முனைப்பு காட்டப்பட்டது. இதுதொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு கடலோரத்தில் அமைந்துள்ள தென்னடார் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இங்குள்ள ஊராட்சிக்குச் சொந்தமான நிலப் பகுதியும், இதையடுத்து, கடற்கரை வரை உள்ள அளவிடப்படாத உப்பளப் பகுதியும் ஆய்வு செய்யப்பட்டது.
இதேபோன்று, கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள வேட்டைகாரனிருப்பு, காரப்பிடாகை சுற்றுப்பகுதியும் (தற்போது அனல் மின் நிலையத் திட்டப் பகுதி) ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், இந்த முயற்சிகளின் முடிவுகள் தெரியாத நிலையில், தற்போது இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
முதியவரின் தனித்த முயற்சி: கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் காளியாப்பிள்ளை (65). இவர் காற்றின் தன்மையை உணர்ந்து, புதிய வடிவமைப்பிலான விசிறிகளின் மூலம் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சியை செயல்படுத்த தில்லியில் செயல்படும் அமைப்பு ரூ. 25 ஆயிரம் நிதியளித்துள்ளது.
அந்த நிதியைக் கொண்டு, கோடியக்கரையில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அவர்.
அனல் மின் நிலையம்: இந்நிலையில், வேதாரண்யத்தை அடுத்துள்ள காரப்பிடாகை பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, வேதாரண்யம் பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்புக்கான முயற்சியை அரசு மேற்கொண்டால், தேவையான மின்சாரத்தைப் பெற முடியும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.